இறால் மற்றும் மீன்வளர்ப்பு இயங்குதளமான அக்வா கனெக்ட் (Aquaconnect) தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு தீவனம் மற்றும் இதர பண்ணை உள்ளீடுகள், உற்பத்தி, நிதி, மற்றும் காப்பீடு சார்ந்த சிக்கல்களை தீர்ப்பதோடு, அறுவடை செய்தபின் சந்தையில் விற்கவும் வழி செய்கிறது. ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் டாவோஸுக்கு UMAGINE அமைப்பின் தலைமையில் செல்லும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஒரு பகுதியாக Aquaconnect செல்கிறது. அங்கு தன் நிறுவனம் மூலம் மீன் மற்றும் இறால் விவசாயிகளுக்கு அளிக்கும் தொழில்நுட்பத் தீர்வுகளை காட்சிப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து Aquaconnect-ன் நிறுவனர், சிஇஓ ராஜமனோகர் சோமசுந்தரம் கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் இந்தத் துறையில் எங்களின் கற்றல் அனுபவங்களையும், ஏற்படுத்திய தாக்கத்தையும் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது கண்டு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறோம். விவசாய சமூகத்தினரிடையே லாபகரமான மீன்வளர்ப்பு, மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2017இல் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள் தொலைஉணர்வுத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவியுடன் மீன்வளர்ப்பு மதிப்புகூட்டு சங்கிலியை உருமாற்றுவதில் முன்னணியில் உள்ளோம்.” என்றார்.
மாநிலத்தின் தொழில்நுட்ப சூழலை மேம்படுத்துவதையும், தீவிரத் தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் துறைசார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ள திட்டமே UMAGINE. தனது உச்சி மாநாடுகளை சென்னையில் ஆண்டுதோறும் நடத்த UMAGINE திட்டமிட்டுள்ளது. முதல் உச்சி மாநாடு செப்டம்பர் 21-23, 2022 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். தற்போது, டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தையொட்டி Umagine அரங்கில் உலக நிறுவனங்களின் தலைவர்களை அணுகும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்தந்த துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஏழு தொழில்நுட்ப தொழில்முனைவோர் குழுவை UMAGINE வழிநடத்துகிறது.
Comments
Post a Comment